கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீ...
பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?
பெங்களூரில் காரில் தனியாக பயணிப்பவர்கள் மீது வரி என்பது பொய்யானது என்று டி.கே. சிவக்குமார் மறுப்பு தெரிவித்தார்.
பெங்களூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிதாய் ஒரு முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அதன்படி, உச்ச நேரங்களில் அதிக போக்குவரத்து பகுதிகளில், ஒரு காரில் ஒருவர் மட்டும் பயணித்தால், அவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரையில் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து, கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், ``அந்தச் செய்தி பொய்யானது; அப்படியொரு திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’’ என்று தெரிவித்தார்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தவாறுதான் இருக்கிறது.
இதனிடையே, இந்த வரி குறித்த வதந்தியால், வழக்கமாக சாலைகளில் லிஃப்ட் கேட்டுச் செல்லும் சாமானியர்கள் உற்சாகமடைந்து, அவர்களும் கருத்து பதிவிட்டனர். ஒருவர் மட்டும் பயணிக்கும் கார்களில் லிஃப்ட் கேட்பது, கார் ஓட்டி வருபவருக்கு உதவியளிப்பதாக இருக்கும் என்று நகைச்சுவையாக பரிமாறிக் கொண்டனர்.
உலகிலேயே போக்குவரத்து நெரிசல் கொண்ட மோசமான நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரில், இந்த வரி நடவடிக்கையானது பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் உள்பட உள்கட்டமைப்பு நெருக்கடி ஆகிய காரணங்களாலேயே பலரும் மைசூரு உள்ளிட்ட வேறு நகரங்களுக்கு செல்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது.