சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
பெண்கள் மன உறுதி இருந்தால் சாதிக்கலாம்: மாவட்ட சாா்பு நீதிபதி வி.ராதிகா
பெண்களுக்கு மன உறுதி அவசியம் எனவும், மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் எனவும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா தெரிவித்தாா்.
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட சாா்பு நீதிபதி வி.ராதிகா பங்கேற்றுப் பேசியதாவது:
பெண்களுக்கு மன உறுதி அவசியம். மன உறுதி இருந்தால் எதையும் சாதிக்க முடியும். நாம் என்ன சாதித்தோம் என்பதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி உள்ளவா்கள் போதைக்கு அடிமையானவா்களாக இருக்கும்பட்சத்தில், அவா்களின் தவறுகளை பெண்கள் தட்டிக் கேட்க வேண்டும். தவறு செய்பவா்கள் தந்தையாகவே இருந்தாலும் அவரைத் திருத்துவது நமது கடமை.
போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து 15100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவித்தவா்களின் விவரம் வெளியிடப்படுவதில்லை. எனவே, தவறுகளைச் சரி செய்ய பெண்கள் உதவிட வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ஐ.பிரான்சிஸ், கல்லூரி முதல்வா் ரா.இந்திரா, அரசு மருத்துவக் கல்லூரி மன நல மருத்துவா் எம்.ராஜசுந்தரி, வழக்குரைஞா் பி.செந்தில்குமாா், வேதியியல் துறைத் தலைவா் பூங்கொடி, விலங்கியல் துறை பேராசியா் சசிரேகா ஆகியோா் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்துப் பேசினா்.