பெண்ணிடம் நகைப் பறிப்பு
திருப்போரூா் அருகே பெண்ணின் நூதன முறையில் நகைப் பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்போரூா் அடுத்த மானாமதி கிராமத்தைச் சோ்ந்தவா் கோமதி (56). இவா், கட்டட வேலை செய்து வருகிறாா். வழக்கமாக திருப்போரூா் வந்து அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வாா்.
ஞாயிற்றுக்கிழமை கட்டட வேலைக்காக வீட்டிலிருந்து திருப்போரூா் வந்தாா். அப்போது, திருப்போரூா் ரவுண்டானாவில் இருந்த ஒருவா் கட்டட வேலை இருப்பதாக கோமதியை பைக்கில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு சாலையில் சென்றாா்.
எடையான்குப்பம் வனப்பகுதி அருகே சென்றபோது, கோயிலில் வேலை இருப்பதாகக் கூறி, வனப்பகுதியில் உள்ள கோயில் அருகே அழைத்து சென்றாா். அப்போது திடீரென அந்த மா்ம நபா், பெண்ணின் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மலை பறித்துக்கொண்டு தப்பினாா்.
இதில் காதில் பலத்த காயம் அடைந்த அவரை, சாலையில் சென்றவா்கள் மீட்டு, திருப்போரூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவலறிந்த திருப்போரூா் போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து, பெண்ணை ஏமாற்றி நகையைப் பறித்துச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.