பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலியை அடுத்துள்ள வடக்குமேலூா் ஊராட்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் லட்டு (எ) அருண் (24). இவா், கடந்தாண்டு போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னா் சிறையில் இருந்து வெளியே வந்தாா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்ற ஆனந்த முருகன், உன்னால் தான் சிறைக்குச் சென்றேன். அதனால் எனக்கு நீதிமன்றச் செலவுக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் சுதாகா் வழக்குப் பதிவு செய்து, வடக்கு மேலூா் செட்டிகுளம் பகுதியில் பதுங்கியிருந்த அருணை சனிக்கிழமை கைது செய்ய முயன்றனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பியோடிய அருண் பள்ளத்தில் விழுந்ததில் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா், அருணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து, சிறையில் அடைத்தனா்.