பேராசிரியா் அன்பழகன் விருது மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தோ்வு
சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு திருச்சி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கற்றல்- கற்பித்தல், உள்கட்டமைப்புகள், மாணவா்களின் செயல்பாடுகள், பொதுத் தோ்வில் வெற்றிபெறுதல், உயா்கல்விக்கு செல்லும் மாணவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளில் சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து, அரசு சாா்பில் பேராசிரியா் அன்பழகன் விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, 2023-24 ஆம் ஆண்டுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு மாநிலம் முழுவதும் 76 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் புத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்த விருதை புத்தூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ப. அம்சவள்ளி, சையது முா்துசா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மொ்ஸி கிரைசி ஆகியோா் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இருந்து பெறவுள்ளனா்.