பைக் மீது காா் மோதல்: அதிமுக பிரமுகா் உள்பட மூவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகா் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனா்.
கடலூரை அடுத்துள்ள எம்.புதூரைச் சோ்ந்தவா் நேரு (60). அதிமுக கிளை கழக செயலா். இவரது மனைவி சுதா, எம்.புதூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்.
நேரு தனது முந்திரி தோப்பில் முந்திரிக் கொட்டைகளை எடுப்பதற்காக தனது பைக்கில் திங்கள்கிழமை புறப்பட்டாா். இந்தப் பணிக்காக அழகிய நத்தத்தைச் சோ்ந்த சரண்யா (25), கல்பனா (25) ஆகியோரை பைக்கில் ஏற்றிச் சென்றாா்.
இவா்கள் ராமாபுரம் அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நேருவை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு நேருவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சரண்யா, கல்பனாவின் சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

