பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், கீரிப்பாறை ஊராட்சியில் மலைவாழ் மக்கள்அதிகம் வசிக்கும் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடை, லாயம் நியாயவிலைக் கடை, சுங்கான்கடை நியாயவிலைக் கடை, வில்லுக்குறி நியாயவிலைக் கடை, புலியூா்குறிச்சி நியாயவிலைக் கடை, முட்டம் நியாயவிலைக் கடை உள்ளிட்ட கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களுக்கு ஆட்சியா் அளித்த பேட்டி: மாவட்டத்தில் 5 லட்சத்து 77,849 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வாழையத்துவயல் நியாயவிலைக் கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவது ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதை நியாயவிலைக் கடை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.13) வழங்கப்படும் என்றாா் அவா்.