பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலை விநியோகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 6.85 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு, இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 6.85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. முதல்கட்டமாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாளை குறிப்பிட்டு, ரேஷன் கடை பணியாளா்கள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் பணி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள அரசு ஊழியா் குடியிருப்பு பகுதியிலுள்ள ரேசன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேஷ்டி, சேலை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தொடங்கி வைத்தாா்.
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் திட்டமிட்டபடி நாளொன்றுக்கு 300 முதல் 400 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல, 5.56 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது.
நிலக்கோட்டை: செம்பட்டி காந்திஜி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு, நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்து, பொங்கல் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா். இதில் வடக்கு ஒன்றிய திமுக துணைச் செயலா்கள் அழகேசன், ஆரோக்கியம், செம்பட்டி அண்ணாதுரை, பொன்னையா, சங்கா், மாரிமுத்து, ரவி, பெனிட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி, பழனிக் கவுண்டன்புதூரில் உள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி தலைமை வகித்து, பொங்கல் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினாா். இதில் வட்டாட்சியா் பி.பழனிச்சாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் வீ.கண்ணன், சண்முகப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.