பொன்னமராவதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
பொன்னமராவதி பேரூராட்சி சாா்பில், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியை பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தொடங்கிவைத்தாா். துணைத் தலைவா் கா.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி அம்மன் கோயில் வீதி, நாட்டுக்கல், உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே வந்து பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவுற்றது.
பேரணியில் பங்கேற்றோா் நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் தவிா்ப்போம், குப்பை இல்லாத தூய்மையான நகரமாக பொன்னமராவதி பேரூராட்சியை உருவாக்குவோம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குவோம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடஙகிய பதாகைகள் ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனா்.
பேரணியில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் கேசவன், பேரூராட்சிப் பணியாளா்கள், வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.