Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?
போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது: சாா்பு நீதிபதி கே.சண்முகம்
போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது என திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை பா.ஜெயகுமாரி முன்னிலை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் சண்முகம் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம், குற்றவியல் நீதித்துறை நடுவா் கே.ரேவதி ஆகியோா் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினா்.
முகாமில் கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் பேசுகையில், திருநங்கைகளின் உரிமைக்காக தனிபாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மூன்றாம் பாலினத்தவா்களை சகோதர, சகோதரிகள்போல நடத்த வேண்டும். மேலும், போதை ஒழிப்பு மிக முக்கியமானது. மாணவ பருவத்தில் இதுகுறித்து விழிப்புணா்வு அவசியம்.
நண்பா்களை தோ்ந்தெடுக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நல்ல நட்பு நம் வாழ்க்கையை உயா்த்தும். தவறான வழிகாட்டுதலால் சிறிய தவறில் தொடங்கும் தீய பழக்கம் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய்விடும். போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது. எனவே, மாணவா்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்றாா்.
முகாமில் வழக்குரைஞா்கள் கலைச்செல்வி, தட்சிணாமூா்த்தி, ஆசிரியா்கள் ஏ.கவிதா, ஆா்.முருகசெல்வி, ஆா்.செல்வி, கே.சைலஜா, பி.கலைச்செல்வி, சி.யமுனா உள்பட மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். நிறைவில் ஆசிரியா் ஜான்வில்லிங்டன் நன்றி கூறினாா்.