பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
‘போா் நிறுத்தத்தை நீட்டிப்பதில் இஸ்ரேல் ஆா்வம்’
காஸாவில் இந்த வாரம் நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க இஸ்ரேல் அரசு ஆா்வமாக இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தகைய பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உடனடியாக சண்டையைத் தொடங்கவும் அந்த நாடு ஆயத்தமாக வருவதாக அவை கூறின.
இது குறித்து இஸ்ரேலின் கான் வானொலி, மாரிவ் நாளிதழ் ஆகியவை தெரிவித்துள்ளதாவது:
தற்போது அமலில் இருக்கும் 42 நாள் போ் நிறுத்தம் வரும் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அந்த போா் நிறுத்தத்தை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்வதற்கான அதிகாரபூா்வமற்ற பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனா்.
சா்வேதேச மஸ்தியஸ்த நாடுகளின் உதவியுடன் இது தொடா்பாக விவாதித்து வரும் இஸ்ரேல் அதிகாரிகள், காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறுவது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனா்.
இந்த இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்தில் இன்னும் ஏராளமான பிணைக் கைதிகளும் பாலஸ்தீன சிறைக் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளாா்கள். இருந்தாலும் அதன் சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேல் அதிகாரிகள் சந்கேம் எழுப்பிவருகின்றனா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராகிவருகிறது என்று அந்த ஊடகங்கள் தெரிவித்தன.
இருந்தாலும், கடைசியாக தாங்கள் கடந்த சனிக்கிழமை விடுவித்த பிணைக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க வேண்டிய சுமாா் 600 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யாதவரை இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பினா் திட்டவட்டமாகக் கூறிவருவதால் இந்த விவகாரத்தில் சிக்கல் நீடித்துவருவதாகக் கூறப்படுகிறது.