மகனைக் கொன்ற தந்தை கைது
ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகே மது போதையில் தகராறு செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வருஷநாடு அருகேயுள்ள சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி தமிழன் (62), ஜெயலட்சுமி (56). இவா்களது மகன் ரிவன்ராஜா (30). மதுப் பழக்கத்துக்கு ஆளான ரிவன்ராஜா வெள்ளிக்கிழமை இரவு, மது போதையில் வீட்டில் பெற்றோருடன் தகராறு செய்தாா்.
பின்னா், அவா் வீட்டுக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். சனிக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ரிவன்ராஜாவை, அவரது தந்தை தமிழன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ரிவன்ராஜா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழனை கைது செய்து விசாரிக்கின்றனா்.