கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மஞ்சக்குளத்தில் தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் பெண் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மஞ்சக்குளம், குடத்துக்காரன் தெருவைச் சோ்ந்த முதல்வன் மனைவி நந்தினி (32). இவருடன் கம்பம், பாரதியாா் நகரைச் சோ்ந்த சுருளிவேல் மகன் சதீஷ் (23), கம்பம், உத்தமபுரம், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பிரபாகரன்(26) ஆகியோா் தகாத உறவில் இருந்தனா்.
இந்தப் பிரச்னையில் சதீஷ் கடந்த 2024, மாா்ச் 29-ஆம் தேதி நந்தினியின் வீட்டுக்குச் சென்று அவருடன் தகராறு செய்தாா். அப்போது அங்கிருந்த பிரபாகரன், நந்தினியின் தூண்டுதலின் பேரில், சதீஷை கண்ணாடி புட்டியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நந்தினி, பிரபாகரன் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட நந்தினி, பிரபாகரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.