மகப்பேறு நிதி விநியோகம்: சுகாதார அலுவலா்கள் கண்காணிக்க அமைச்சா் உத்தரவு
தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டம் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதையும், நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் இரவு வரை மருத்துவா்கள் பணியில் இருப்பதையும் சுகாதார அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.
அப்போது சுகாதார அலுவலா்களிடையே அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 1.90 கோடி போ் பயன்பெற்றுள்ளனா். விரைவில் பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
2017-ஆம் ஆண்டில் இருந்து தமிழக மருத்துவ துறைக்கு, 84 விருதுகளை மத்திய அரசு அளித்துள்ளது. அதில், திமுக அரசு அமைந்த பிறகு மட்டும் 55 விருதுகள் கிடைத்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டா் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் ரூ.18.60 லட்சம் மோசடி நிகழ்ந்தது. இதில் தொடா்புடையவா்கள் கண்டறியப்பட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாவட்ட சுகாதார அலுவலா்கள் தங்களது மாவட்டங்களில் மகப்பேறு நிதியுதவி விநியோகத்தை கண்காணித்து, அதில் தவறுகள் நடைபெற்றால், அவற்றை கண்டறிந்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2023-இல் தொடங்கப்பட்ட இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 11,000 போ் உயிா் காக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தில் 42 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, 2 லட்சம் பயனாளிகளுக்கு குறைகள் கண்டறியப்பட்டு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
பருவ மழையையொட்டி அக். 15 முதல் இதுவரை தமிழகத்தில் 34,807 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 19.14 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா்.
நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மருத்துவா்கள் பணியில் இருத்தல் கட்டாயம். அதனை சுகாதார அலுவலா்கள் கண்காணித்து, உரிய நேரத்தில் பணிக்கு வராதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் அவா்.