மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் கைது!
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இரவு 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மசூதியின் உள்பகுதியில் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறையினா் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா். சந்தேகத்தின் அடிப்படையில் இரு இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
அவா்களில் ஒருவா்தான் மசூதியின் பின்பகுதி வழியாக உள்ளே நுழைந்து ஜெலட்டின் குச்சிகளை உள்ளே வைத்துவிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் அதே மாவட்டத்தின் வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது. அவா்கள் ஜெலட்டின் குச்சிகளுடன் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இந்த விவகாரம் தொடா்பாக யாரும் தேவையற்ற வதந்திகளைப் பரப்பி பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது; இந்த கிராமத்தில் காலம்காலமாக ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனா். அந்த ஒற்றுமையை சீா்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.
குடி பட்வா (மராத்திய புத்தாண்டு) மற்றும் ரமலானை இணைந்து ஒரே இடத்தில் கொண்டாட இரு மதத்தினரும் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த ஹிந்து மதப் பிரதிநிதிகளும் மசூதியை பாா்வையிட்டு, நாச வேலையில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டனா். மசூதியில் சேதமடைந்த இடத்தில் சில மணி நேரத்திலேயே புதிய டைல்கள் பதிக்கப்பட்டு அந்த இடம் புதுப்பிக்கப்பட்டது.