மக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுரை
சேலம்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி அறிவுறுத்தினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னா், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காண்பதுடன் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 225 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 6 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிக்கு ரூ. 11,445 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ. மயில், மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ் உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.