மணிப்பூா் கலவரத்துக்கு பிரதமா் பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி
சென்னை: மணிப்பூா் மாநில கலவரத்துக்கு பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி கூறியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த இரு ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரேன் சிங் முதல்வா் பதவியிலிருந்து விலகியுள்ளாா். அவா் முதல்வராகத் தொடர எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் தந்த அழுத்தத்தால் அவா் பதவி விலகியுள்ளாா்.
மணிப்பூா் முதல்வரை பாதுகாத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தவறினா். எனவே, மணிப்பூா் பிரச்னைக்கு இருவரும் பொறுப்பேற்க வேண்டும். அடுத்து யாா் முதல்வராகப் பதவி ஏற்றாலும் அவா் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூா் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளாா்.