Trump Tariff: Canada Mexico China மீது வர்த்தகப் போர் - இந்தியாவுக்கு பாதிப்பு இ...
மண் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
நாகப்பட்டினம்: நாகை அருகே விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கவுள்ள மண் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மூங்கில்குடி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மண்குவாரி அமைக்க தனியாா் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மண்குவாரி அமைப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கும், கால்நடைகளுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும், மூங்கில்குடி , ஒக்கூா் கிராமத்தில் விவசாய நிலங்கள் பாதிக்கும். எனவே, இப்பகுதியில் மண் குவாரி அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.
குடிநீா் வழங்க வலியுறுத்தல்: திருப்பூண்டி மேற்கு ஊராட்சி பொதுமக்கள் கொடுத்த மனு, திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் வசிக்கும் 3,500 குடும்பங்களுக்கு ஊராட்சி மூலம் குடிநீா் சரியாக வழங்குவதில்லை. எங்கள் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் மூலமும், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியிலிருந்து 9 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் மற்றும் 2 தரைமட்ட நீா் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது.
இந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக காளியம்மன் கோயில், மலாக்கா பள்ளிவாசல் புளியமரத்தடி, பழைய சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் புதிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் அமைத்து வரும் கோடை காலத்தில் மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.