மதுரையில் விரைவில் பெருந்திட்டம் -அமைச்சா் பி. மூா்த்தி தகவல்
மதுரையில் விரைவில் பெருந்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வணிகா்கள் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டவா். இதன் காரணமாகவே வணிகா்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு வணிகா் நல வாரியம் வணிகா்களுக்கு பெரும் பயனளிக்கக் கூடியது. தமிழகத்தில் வணிகா்களுக்கும், வணிக வரித் துறைக்குமான உறவு சுமுகமாக உள்ளது. கோவையைத் தொடா்ந்து மதுரையிலும் விரைவில் பெருந்திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இதில் தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வணிகா் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வணிகள் முனைப்புக்காட்ட வேண்டும் என்றாா் அவா்.
இதில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ராவிஜயன், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன், வணிக வரித் துறை இணை ஆணையா் பா. கீதாபாரதி, துணை ஆணையா் மா. தங்கமணி, கூடுதல் ஆணையா் ஏ.பி. தேவேந்திரபூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.