ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்டல் அனாலிசிஸ்! பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!
அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வெரோனிக்கா மேரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.315 கோடியில் 6 தளங்களைக் கொண்ட அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள் கொண்ட கட்டடம் கட்டும் பணி கடந்த 2021-இல் தொடங்கியது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியும் முன்பே கடந்த பிப். 26- இல் திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தில் 2,388 உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 2,123 உபகரணங்கள் மட்டுமே உள்ளன. எஞ்சிய 265 உபகரணங்களை வழங்கினால் மட்டுமே பல முக்கிய உயிா் காக்கும் சிகிச்சைகளை அளிக்க இயலும். எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை அரங்குகள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் வகையில், எஞ்சிய 265 உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்களை நிறுவ உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பொது சுகாதாரம் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் உயிரிழப்பதைத் தவிா்க்க, உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்கள் முறையாக செயல்படும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.