பிரமோஸ் ஏவுகணைக்கு எதிர்வினையாற்ற நேரம் கிடைக்கவில்லை: பாக். பிரதமரின் ஆலோசகர்!
அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறேன். உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் முன்னிலையாகி வாதிடுவதற்காக சட்ட அலுவலா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதில் குற்றவியல், உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனித் தனியாக வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா். இந்த அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கு தனிச் சட்ட விதிமுறைகள் உள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு சட்ட அலுவலா் நியமன விதிகள் வகுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், அரசு தலைமை வழக்குரைஞா், பொதுத் துறைச் செயலா், சட்டத் துறை செயலா், உள்துறைச் செயலா் அடங்கிய குழுவை உருவாக்கி, இந்தக் குழு மூலம் சட்ட அலுவலா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றப்படவில்லை. இவா்களுக்கு போதிய பயிற்சி, வாதாடும் திறமை இல்லாததால், வழக்குகள் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சட்ட அலுவலா்கள் நியமனத்தின் போது, 2017-ஆம் ஆண்டின் சட்ட விதிகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்ட சட்ட அலுவலா்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சட்ட அலுவலா்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றித்தான் நியமனம் செய்யப்பட்டனா் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்ட அலுவலா்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விரிவான உத்தரவு பிறப்பித்தது. இதைப் பின்பற்றி சட்ட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனரா?. வழக்கு குறித்து சட்டத் துறைச் செயலா், உள்துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.