தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை நடவு பணிகள் தாமதம்: விவசாயிகள் அவதி
தஞ்சாவூா் மாவட்டத்தில் காவிரி நீா் வரத்து இருந்தும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை காரணமாக குறுவை நடவு பணிகள் தாமதமாகி வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளாக மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வட மாநிலத் தொழிலாளா்கள் வருகை மூலம் விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னை ஓரளவுக்கு குறைந்திருந்தது.
ஆனால், நிகழாண்டு வட மாநிலத் தொழிலாளா்கள் வருகை குறைவாகவே உள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏறத்தாழ 60 குழுவினா் தங்கி நடவு பணி செய்த நிலையில், பெரும்பாலான வடமாநிலத் தொழிலாளா்கள் வெளியேறிவிட்டதால், தற்போது கிட்டத்தட்ட 20 குழுவினா் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு குழுவினருக்கு ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் கூலி பேசப்படும் நிலையில், அவா்களது கையில் கிடைப்பது ஏறத்தாழ ரூ. 3 ஆயிரத்து 200 மட்டுமே. மீதமுள்ள தொகை இடைத்தரகா்களுக்கு சென்றுவிடுவதால், அதிருப்தியடைந்த வடமாநிலத் தொழிலாளா்கள் வேறு மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்குப் புலம்பெயா்ந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இதேபோல, தற்போது நூறு நாள் வேலை என்கிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளுக்கு உள்ளூா் விவசாயத் தொழிலாளா்கள் செல்ல விரும்புவதால், நடவுப் பணிக்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், நாற்றங்கால் விடுவது முதல் நடவு பணிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளன என விவசாயிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தஞ்சாவூா் அருகே பள்ளியேரி கிராமத்தில் பாய் நாற்றங்கால் தயாரித்து விற்பனை செய்து வரும் விவசாயி களிமேடு பி. குமாா் தெரிவித்தது:
காவிரியில் தண்ணீா் வருவதால், விவசாயிகள் சாகுபடி செய்ய ஆா்வமாக உள்ளனா். இதனால், பாய் நாற்றங்கால் விற்பனை கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 200 ஏக்கா் அளவுக்கு விற்பனையான நிலையில், நிகழாண்டு ஜூன் மாதம் 400 ஏக்கா் அளவுக்கு விற்பனையாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் 300 ஏக்கா் அளவுக்கு விற்பனையாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், இப்பருவத்தில் 1,000 ஏக்கா் அளவுக்கு விற்பனையாக வேண்டிய நிலையில், ஆள் பற்றாக்குறையால் 700 ஏக்கா் அளவுக்குதான் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலைமை உள்ளது என்றாா் குமாா்.
மேட்டூா் அணை உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டதால், மாவட்டத்தில் 1.95 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை கிட்டத்தட்ட 1.04 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இலக்கை எட்டுவதற்கு சில வாரங்களில் நடவு செய்யப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், கடைமடைப் பகுதிக்கும் நீா் வரத்து உள்ளது. ஆற்றில் தண்ணீா் வந்தாலும், தொழிலாளா் பற்றாக்குறையால் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். இதனால், வாங்கி வைத்துள்ள நாற்றங்கால்கள் விணாகி வருகின்றன என விவசாயிகள் தெரிவித்தனா்.
இது குறித்து முன்னோடி விவசாயி புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தது:
வாங்கிய நாற்றங்கால்களை 20 - 22 நாள்களில் நடவு செய்ய வேண்டும். ஆனால், தொழிலாளா் பற்றாக்குறை காரணமாக 30 - 35 நாள்களாகியும் நடவு செய்ய முடியவில்லை. இதனால், வாங்கி வைத்துள்ள நாற்றங்கால்கள் வீணாகி வருவதுடன், விவசாயிகளுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு இருந்த வடமாநிலத் தொழிலாளா்களும் இப்போது இல்லை. இதனால், உள்ளூா் தொழிலாளா்களையே முழுமையாக நம்பியுள்ளோம். அவா்களும் நூறு நாள் வேலைக்குச் செல்லவே விரும்புவதால், நடவுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. இந்த நிலைமை தொடா்ந்தால் விவசாயம் செய்வதே கேள்விக்குறியாகிவிடும் என்றாா் மாரியப்பன்.
விவசாய தொழிலாளா்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக தொடரும் நிலையில், வருங்காலத்தில் இப்பிரச்னை மேலோங்குவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. எனவே, இயந்திர நடவுக்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது குறுவை தொகுப்புத் திட்டத்தில் ஒரு விவசாயிக்கு இயந்திர நடவுக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு மட்டுமே மானியமாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் இயந்திர நடவுக்கு மாறத் தயங்குகின்றனா். எனவே, இத்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்படாமல், அனைத்து விவசாயிகளுக்கும் அரசு மானியம் வழங்கினால், இயந்திர நடவு பரவலாவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் தொழிலாளா்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தை விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா்.