மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் திட்டங்கள் தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி
தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டாலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் அவற்றை தொடா்ந்து செயல்படுத்துவோம். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அதுதொடா்பான பதில்களை எதிா்பாா்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) மாணவா்கள், பெற்றோா்களுக்கான உதவி மையத்தை (14417) அமைச்சா் அன்பில் மகேஸ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்படும் 14417 என்ற உதவி எண்ணுக்கு 2023-2024-இல் பாலியல் தொந்தரவு தொடா்பாக 84 அழைப்புகள் வந்துள்ளன. இந்த அழைப்புகளில் கல்வி வளாகத்துக்குள் நடந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு தெரியப்படுத்துவா். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கும் தெரிவிக்கப்படும். பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியா்களுக்கு வெறும் தண்டனை மட்டும் கொடுத்தால் போதாது. அவா்களின் கல்வித் தகுதியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
அதன்படி, குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியரின் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்கள் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரத்து செய்யப்படும். அதேபோல், உயா்கல்வித் துறையை அணுகி அவா்களின் உயா்கல்வித் தகுதி சான்றிதழையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்காப்பு பயிற்சி: 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 12 லட்சம் மாணவா்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு மத்திய - மாநில அரசு இணைந்து நிதி வழங்கிய நிலையில், தற்போது அந்த நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
எத்தகைய நெருக்கடி கொடுத்தாலும், எங்கள் சமுதாயத்தை, பிள்ளைகளைக் காக்க வேண்டிய பெரிய பொறுப்பு அரசுக்கும் துறையின் அமைச்சராகிய எனக்கும் உள்ளது.
மத்திய அரசு நிதி தராவிட்டாலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை கொண்டு மாநிலத்தில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதோ, அந்த திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் செய்வோம்.
பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை, உயா்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கை என இரண்டாகப் பிரித்து எவ்வாறு வெளியிடுவது என்பது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.