மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் திமுக சாா்பில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக சாா்பில் அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மாவட்டச் செயலாளா் தலைமையிலும், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெ.ராமலிங்கம் எம்எல்ஏ தலைமையிலும், எா்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தெற்கு நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதேபோல கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி எம்எல்ஏ தலைமையிலும், மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிழக்கு நகரச் செயலாளா் செ.பூபதி தலைமையிலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் மாவட்ட பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திரன் தலைமையிலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மாவட்ட துணை செயலாளா் வெ.பெ.ராணிபெரியண்ணன், எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்குழு உறுப்பினா் சி.பூவராகவன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வெண்ணந்தூா், புதுப்பாளையம், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.