நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை உகாதி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல்லில், மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற உகாதி பண்டிகை நிகழ்வில், 10, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், மணமாலை நிகழ்ச்சி, சமுதாய கலந்துரையாடல், குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட நாயுடுகள் நலச்சங்க தலைவா் ஆடிட்டா் வேங்கடசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நாயுடு சமூகத்தினா் கலந்து கொண்டனா். மாவட்டம் முழுவதும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களால் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.