40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
பாண்டமங்கலம், வெங்கரை பேரூராட்சிகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்
பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிகளில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட திட்டமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா், குழந்தைகளின் கற்றல் திறன், எழுத்தறிவு, வாசிப்புத் திறன் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்து, மாணவா் சோ்க்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு காலையில் சமைக்கப்பட்ட உணவு, பயன்பெறும் குழந்தைகளின் விவரம் குறித்தும், மதிய உணவு திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்ட உணவின் தரம், உணவுப் பொருள்கள் இருப்பு, முட்டைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் திட்டமேடு அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, வயதுக்கேற்ற எடை, உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.
வெங்கரை பேரூராட்சி, திட்டமேடு மற்றும் கொந்தளம் ஊராட்சியை இணைக்கும் வகையில் ராஜவாய்க்கால் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில் ரூ. 43 லட்சம் மதிப்பில் 11 மீ. நீளம், 5 மீ. அகலத்தில் புதிதாக பாலம் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டாா். வெங்கரை பேரூராட்சி, உப்பிலியா் தெருவில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வுசெய்து, ஊா் பொதுமக்களுடன் கலந்துரையாடினா்.
பாண்டமங்கலம் பேரூராட்சி, ராஜவாய்க்கால் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில், ரூ. 40 லட்சம் மதிப்பில் 11 மீ. நீளம், 5 மீ. அகலத்தில் புதிதாக பாலம் அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் வினோத்குமாா், பேரூராட்சி உதவி செயற்பொறியளாா் பழனி, வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவானந்தம் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.