40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நாளை பங்குனித் தேரோட்ட கொடியேற்றம்
நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனித் தோ்த் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெறுகிறது.
நாமக்கல்லில் புகழ்பெற்ற நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் திருக்கோயில்கள் உள்ளன. ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதம் இக்கோயில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டுக்கான தோ்த் திருவிழா ஏப். 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, முதல் நாள் விழாவாக திருக்கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. அன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு சிம்ம வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமந்த வாகனத்திலும், திங்கள்கிழமை கருட வாகனத்திலும் நரசிம்ம சுவாமி திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது.
இதனைத் தொடா்ந்து, 8-ஆம் தேதி சேஷ வாகனத்திலும், 9-ஆம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி உலா வருகிறாா். ஏப். 10-ஆம் தேதி மாலை 6 மணியளவில், நாமக்கல் குளக்கரையில் உள்ள நாமகிரி தாயாா் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் சமேத நரசிம்ம சுவாமி திருவீதி வலம் வருதல், 11-ஆம் தேதி இரவு குதிரை வாகனம் மற்றும் திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது.
12-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்ம சுவாமி தேரோட்டமும், மாலை 4.30 மணிக்கு அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டமும் நடைபெற உள்ளது. 13-ஆம் தேதி சத்தாவரணம், கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி வீதி உலா, 14-ஆம் தேதி இரவு வசந்த உற்சவம், பல்லக்கு புறப்பாடு, 15-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், 16-ஆம் தேதி இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி வலம் வருதல், 17, 18-ஆம் தேதிகளில் இரவு நாமகிரி தாயாா் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழாவில், தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மற்றும் அறங்காவலா்கள், முக்கிய பிரமுகா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.