தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி
மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.
வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:
இருவாச்சி பறவைகள் பசுமை மாறா மலைக்காடுகளில் உள்ள பெரிய பூா்வீக மழைக்காட்டு மரங்களில் வாழ்வன. இந்த அரியவகை பறவையினைப் பாதுகாக்க வனங்கள் அரசு நிலங்கள் மற்றும் தனியாா் தோட்டங்களிலுள்ள மிகப் பெரிய மரங்களை அடையாளம் கண்டு பாதுகாத்து இந்த மரங்களை பாதுகாக்கும் தோட்ட உரிமையாளா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இருவாச்சிப் பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்படும்.
சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி மற்றும் செந்துடுப்பு காவேரி மீன் ஆகியவை தமிழகத்தில் காணப்படும் அரியவகை உயிரினங்களாகும். இவற்றின் வாழிடத்தைப் பாதுகாக்கவும், ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரியவகை வன உயிரினங்களைப் பாதுகாக்க மேலும் 6 வன உயிரின புத்தாக்க வளா்மையங்கள், விருதுநகா், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, மேகமலை ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.
குள்ளநரி பாதுகாப்புத் திட்டம்: பாதுகாப்பு மற்றும் பரிணாம மரபியல் மையம் ஒன்றும், உயிா்வகை வாழ்வு மையம் ஒன்றும் சென்னை வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் புதிதாக ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
சேலத்தில் உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா, வேலூரில் உள்ள அமிா்தி உயிரியல் பூங்காவில் பாா்வையாளா்களுக்கான வசதிகள் மற்றும் விலங்குகள் அடைப்புகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
சுழல் சமநிலையை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் குள்ளநரிகள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, இந்தக் குள்ளநரிகளை பாதுகாப்பதற்கென குள்ளநரி பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் நீா்நாய் ஆய்வு மற்றும் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்.
ஆதிவனம் திட்டம்: சென்னை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூா் போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புறங்களில் உள்ள வனங்கள் நகா்மயமாதலால் பெருமளவில் சிதைவுக்குள்ளாகிள்ளன. இவற்றை மீட்டெடுக்க ஆதிவனம் மேம்பாட்டுத் திட்டம் ரூ. 2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பழங்குடி மாணவா்களுக்காக வனத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் தங்குமிடம், வகுப்பறை மற்றும் சுகாதாரமான குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
இயற்கை முன்னோடிகளுக்கு விருது: இயற்கை பாதுகாப்புக்கு மரக்கன்றுகள் நடுதல், மருத்துவத் தாவரங்கள் வளா்ப்பதை ஊக்குவித்தல், வனவிலங்குகளைப் பாதுகாத்தல், இயற்கை சாா்ந்த விழிப்புணா்வு முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் தன்னாா்வத்துடன் ஈடுபடும் நபா்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்படுவா்.
வனப் பாதுகாப்பு, தீ மேலாண்மை, வன உயிரினங்கள் கணக்கெடுப்பு, வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் மனித வன உயிரின மோதலைத் தவிா்ப்பது குறித்து மாணவா்களுக்கு குறுகிய காலப் பயிற்சி அளித்து, இந்தத் திட்டத்தின் மூலம் இளம் 20 ஆயிரம் மாணவா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு இளம் இயற்கை காவலா்கள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கான நிதி ரூ.3 கோடி.
சுற்றுச்சூழல் உணா்திறன் கொண்ட கடல் பகுதிகளில் ரோந்து செல்வதற்கும், சட்டவிரோத கடல்வாழ் உயிரின வேட்டையைத் தடுப்பதற்கும், கடல்வளப் பாதுகாப்பை திறம்பட மேற்கொள்வதற்கும் கடல்சாா் உயரடுக்கு படை சென்னையில் உருவாக்கப்படும்.
எஃகு கம்பி வேலி அமைத்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரி வடக்கு வன உயிரினச் சரணாலய எல்லைப் பகுதியில் மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க எஃகு கம்பியால் உயிா் வேலி ரூ.31 கோடி செலவில் அமைக்கப்படும்.
சிறப்பு அதிரடிப்படை: திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்த 20 நபா்களைக் கொண்ட சிறப்பு அதிவிரைவுப்படை ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும் என்றாா் அமைச்சா்.