மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது
சேலத்தில் வாரிசு வேலை கேட்டு மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக தேவராஜன் (55) என்பவா் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரித்த ஒருவா் இறந்து விட்டாா். இதையடுத்து அவருடைய மகள் கருணை அடிப்படையில் தனது தந்தையின் பணிக்கு வாரிசு வேலை கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். மேலும் பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் கண்காணிப்பாளா் தேவராஜனிடம் துறை ரீதியாக பரிந்துரை செய்ய உதவி கோரியதாகக் கூறப்படுகிறது.
அப்போது தேவராஜன் அந்த பெண்ணிடம் தன்னிடம் சகஜமாகப் பழக வேண்டும் எனக் கூறியதுடன், பாலியல் ரீதியாக பேசியதாகத் தெரிகிறது. தேவராஜன் பேசிய உரையாடலை பதிவு செய்து அந்த பெண், இது குறித்து சேலம் டவுன் அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தாா். தேவராஜன் பேசிய கைப்பேசி பதிவுகளை போலீஸாரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினாா். அதன் பேரில் தேவராஜன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் அவரைக் கைது செய்தனா்.