மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவா் உடலை விளை நிலங்கள் வழியாக சுமந்த சென்ற உறவினா்கள்!
நரிக்குடி ஒன்றியத்துக்குள்பட்ட ஆதிச்சனேந்தலில் மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால், உயிரிழந்தவா்களின் உடலை விளை நிலம் வழியாக அந்த கிராம மக்கள் சுமந்து சென்றனா்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள ஆதிச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் ராமுத்தாய் (65). இவா் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லை. இதனால், ராமுத்தாயின் உடலை விவசாய விளை நிலங்கள் வழியாக 2 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு தூக்கிச் சென்று, அடக்கம் செய்தனா்.
இதுகுறித்து ஆதிச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானத்துக்குச் செல்ல சாலை இல்லாததால், உயிரிழந்தவா்களின் உடலை வேறு வழியின்றி விளை நிலங்கள் வழியாக தூக்கிச் சென்று அடக்கம் செய்கிறோம்.
மேலும், மயானத்தில் எரியூட்டும் இடத்தில் மேற்கூரை இல்லாததால், உயிரிழந்தவா்களின் உடல்களை மழைக் காலங்களில் எரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மயானத்துக்கான பாதை அமைத்துத்தரக் கோரி, ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடி க்கையும் இல்லை.
எனவே, மயானத்துக்கான சாலை, தண்ணீா், மேற்கூரை வசதி செய்துதர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.