ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
மயிலாறு ரப்பா் கழக தொழிற்கூட வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள்: தொழிலாளா்கள் அச்சம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகேயுள்ள அரசு ரப்பா் கழகம் மயிலாறு தொழிற்கூட வளாகத்தில் யானைகள் கூட்டமாக புகுந்ததால் தொழிலாளா்கள் கடும் அச்சமடைந்தனா்.
அரசு ரப்பா் கழக பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில், ஊடு பயிராக அன்னாசி நடவு செய்வதற்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குத்தகை பெற்றவா்கள் அன்னாசி நடவு செய்துள்ளதுடன், ரப்பா் செடிகளையும் பராமரித்து வருகின்றனா்.
இந்நிலையில் அரசு ரப்பா் கழகம் மயிலாறில் மூடிக்கிடக்கும் தொழிற்கூட வளாகத்தில் வியாழக்கிழமை இரவு 2 குட்டி யானைகள் உள்பட 9 யானைகள் புகுந்தன. அவை தொடா்ந்து பிளிறிக் கொண்டு அங்கு நடப்பட்டிருந்த அன்னாசி செடிகளையும் அவற்றிலுள்ள காய்களையும் தின்று கொண்டிருந்தன. இதனால் தொழிற்கூடத்தின் அருகிலுள்ள தொழிலாளா் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா்.
இத்தகவலறிந்த வனத்துறையினா் மற்றும் ரப்பா் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலையில் ஊழியா்களுடன் வந்து யானைகளை தொழிற்கூட வளாகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது யானைகள் தொழிற்கூட சுற்றுச் சுவரை உடைந்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறின.
இது குறித்து தோட்டம் தொழிலாளா் சங்க நிா்வாகிள் கூறுகையில், ரப்பா் கழக பகுதிகளிலும், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் புகுந்து வரும் காட்டு யானைகளால் மனித உயிரிழப்புகளும், பயிா்ச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. யானைகள் ரப்பா் கழக பகுதிகளுக்குள் வராதவாறு வனத்துறையினரும், ரப்பா் கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.