‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி! -தொல்.திருமாவளவன்
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளிகள் சங்க மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தி சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்திருக்க வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக, தனித்து நின்று வாக்குகளைச் சிதறடித்துவிட்டனா். இண்டி கூட்டணியை வலிமைப்படுத்தும் தாா்மிகப் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலாக இருந்தாலும், மக்களவைத் தோ்தலாக இருந்தாலும், இண்டி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
வழக்கத்துக்கு மாறாக, தில்லியில் பாஜகவினா் வாக்குகளுக்கு பணம், பொருள் கொடுத்திருப்பதாக விமா்சனம் எழுந்திருக்கிறது. தலைநகா் தில்லியைக் கைப்பற்றியாக வேண்டிய நிா்பந்தத்துடன் பாஜக களமிறங்கியது. கேஜரிவாலுக்கு கிடைத்த தோல்வி என்பதைவிட, இண்டி கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என்பதே நிதா்சனம்.
தில்லியைத் தொடா்ந்து, தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், இந்தக் கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருக்கிறோம்.
தனியாா் பள்ளி ஆசிரியா்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். தனியாா் பள்ளிகளைப் பாதுகாக்க தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா் அவா்.
திருப்பரங்குன்றம்: முன்னதாக, சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரைக்கு வந்த தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனா். ஒரு சில கட்சிகள்தான் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் மதம் சாா்ந்த பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனா்.
தமிழகத்தில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பாஜக ஆட்சி நிா்வாகம் திராவிட கருத்துகளுக்கு எதிராக உள்ளது. இதனால், திமுக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிா்க்கிறது. இதன் காரணமாக, மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றாா் அவா்.