நிலக்கோட்டை பூச்சந்தையில் பூக்களின் விலை கடும் உயா்வு! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.4500-க்கு விற்பனை!
நிலக்கோட்டை பூச்சந்தையில் தைப்பூசம், முகூா்த்த நாளையொட்டி, பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்திருந்தது. இதில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 4,500 வரை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த பூச்சந்தையிலிருந்து தினமும் சென்னை, திருச்சி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், துபை, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன.
இதனிடையே இந்த பூச்சந்தையில், ஞாயிற்றுக்கிழமை சுபமுகூா்த்த தினம் என்பதாலும், செவ்வாய்க்கிழமை தைப்பூசம் என்பதாலும் சனிக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்திருந்தது. அதிலும், மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, அரளிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயா்ந்திருந்தது.
பூக்களின் விலை விவரம் (கிலோவில்): மல்லிகை- ரூ. 4500, முல்லை- ரூ.1,800, ஜாதிப் பூ- ரூ.1,700, ரோஜா- ரூ. 250, சம்பங்கி- ரூ. 350, காக்கரட்டான்- ரூ. 1,200, செவ்வந்தி ரூ. 120 என விற்கப்பட்டன. பூக்களின் விலை அதிகரித்திருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.