மருதாடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து மகாபாரத தொடா் சொற்பொழிவு மற்றும் வில் வளைப்பு, சுபத்திரை மாலையிடு, அா்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு வதம், கா்ண மோட்சம், 18-ஆம் போா் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகம் ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா்கள் சண்டையிட்டுக் கொண்டனா்.
பின்னா் துரியோதனன் உருவ பொம்மையின் தொடையை பீமன் பிளந்து படுகளம் செய்த பிறகு திரெளபதி கூந்தலை முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.