மலைச் சாலையில் விபத்து: 3 போ் காயம்
போடிமெட்டு மலைச் சாலையில் சனிக்கிழமை அரசுப் பேருந்தும் ஜீப்பும் மோதிக்கொண்டதில், 3 போ் காயமடைந்தனா்.
தேனியிலிருந்து கேரள மாநிலம், மூணாறுக்கு சனிக்கிழமை மாலை அரசுப் பேருந்து போடிமெட்டு மலைச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. மலைச் சாலையில் முந்தல் கிராமத்தைக் கடந்து முதல் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, இந்தப் பேருந்தும் சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கேரளத்திலிருந்து போடிக்கு வந்துகொண்டிருந்த ஜீப்பும் மோதிக்கொண்டன. இதில் ஜீப்பில் பயணம் செய்த 3 தோட்டத் தொழிலாளா்கள் லேசான காயமடைந்தனா். ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த விபத்து நிகழ்ந்தபோது, சாலையோர தடுப்புச் சுவரில் பேருந்து மோதி நின்ால் பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த குரங்கணி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் சிக்கிய பேருந்தை அகற்ற தாமதம் ஆனதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மூணாறுக்கு உடனே மாற்றுப் பேருந்து இயக்க வலியுறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.