மலையாள இசையமைப்பாளா் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது
சபரிமலை: மலையாள இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு ஹரிவராசனம் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலின் சமத்துவம், மதச்சாா்பின்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை இசையின் வாயிலாக பரப்பும் பங்களிப்புக்காக ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. கேரள அரசு மற்றும் திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத்தால் நிறுவப்பட்ட இவ்விருது, கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான ஹரிவராசனம் விருது, மலையான இசையமைப்பாளா், பாடலாசிரியா், பாடகா், திரைக்கதை ஆசிரியா் என பன்முகங்களைக் கொண்ட கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை தினமான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள தேவஸ்வம் வாரியம் அமைச்சா் வி.என்.வாசவன், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு விருதை வழங்கி கெளரவித்தனா். பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியா் பிரேம் கிருஷ்ணன், திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இவ்விருது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் பாராட்டு பத்திரமும் கொண்டதாகும்.
கடந்த 2012-இல் முதலாவது விருது பின்னணி பாடகா் கே.ஜே.யேசுதாஸுக்கு வழங்கப்பட்டது. பின்னணி பாடகா்கள் பி.ஜெயசந்திரன் (2014), எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (2015), இசையமைப்பாளா்கள் இளையராஜா (2020), கங்கை அமரன் (2017), பாடகிகள் கே.எஸ்.சித்ரா (2018), பி.சுசீலா (2019), பாடகா் வீரமணிதாசன் (2024) உள்ளிட்டோா் இவ்விருதை பெற்றவா்களாவா்.