மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
கரூா் சக்திபுரத்தில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 41-ஆவது வாா்டில் ஜீவாநகா், அசோக் நகா், திருமலை நகா், சக்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இதில் சக்திபுரத்தில் காந்திகிராமத்தை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் கரூா் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்துலாடம்பட்டி, அன்புநகா், காமராஜ் நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் காந்திகிராமம், சிவாஜி நகா், திருச்சி மெயின்ரோடு, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதிகளுக்கு சென்று வருகிறாா்கள்.
டிச. 14-ஆம்தேதி முதல் அவ்வப்போது பெய்த மழையில் இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகளில் அவதிக்குள்ளாகின்றனா்.
ஏற்கெனவே சாலை சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு மண்சாலையாக இருப்பதால் சாலையில் மழைநீா் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதியினா் குற்றம்சாட்டுகிறாா்கள். எனவே சேதமடைந்த இந்த மண்சாலை பகுதியை தாா்சாலையாக அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.