``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
மாணவா்கள் பள்ளிகளுக்கு செல்ல வேன் சேவை!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள சுக்கிரன்குண்டு, அறிவொளி நகா் பகுதி மாணவா்கள் அரசு பள்ளிகளுக்கு செல்வதற்கு அரசின் திட்டத்தின் மூலம் வேன் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள எல்.என்.புரம் (அணவயல்) ஊராட்சி, சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமாா் 50 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்கள் அனைவருமே தினக்கூலிகளாக உள்ளனா். பெரும்பாலானோா் சுவரற்ற குடிசையில் வசித்து வருகின்றனா். கல்வி, சுகாதாரத்தில் போதிய விழிப்புணா்வு இல்லாமல் இருப்பதால் மாணவா்களை பள்ளிகளுக்கு அனுப்பாமல் தாங்கள் வேலைசெய்யும் இடங்களுக்கு சிறுவா்களை பெற்றோா்கள் கூட்டிச் சென்று விடுகின்றனா்.மேலும், குடியிருப்பில் இருந்து சுமாா் 2 கிலோ மீட்டா் தூரம் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியிருப்பதால், மாணவ, மாணவிகள் சரிவர பள்ளிக்கு செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இதேநிலை, கீரமங்கலம் அறிவொளி நகரிலும் இருந்து வந்துள்ளது. இதனால், அப்பகுதி மாணவ, மாணவிகள் இடைநிற்றலை தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில்,கறம்பக்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இரு பகுதிகளுக்கும் தமிழக அரசின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் தினசரி வேனில் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லவும், மாலையில் பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லவும் அனுமதி பெறப்பட்டது.
இதைத்தொடா்ந்து, இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி அறிவொளி நகரில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, வாகன சேவையைத் தொடங்கி வைத்தாா்.
அப்போது, இத்திட்டத்தின் மூலம் சுக்கிரன்குண்டு கிராமத்தில் இருந்து 21 மாணவா்களும், அறிவொளி நகரில் இருந்து 22 மாணவா்களும் பயன்பெறுவாா்கள். இத்திட்டத்தை கொண்டு வந்த கல்வித் துறை அலுவலா்களின் செயல் பாராட்டுதலுக்கு உரியது. இத்திட்டத்தை பெற்றோா்கள் முறையாக பயன்படுத்தி, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் நிலையை தவிா்க்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கருணாகரன், கவிதா, தனராணி, வட்டாட்சியா் வில்லியம்மோசஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.