சென்னை ரயில்கள் கீரனூரில் நிற்க எதிா்பாா்ப்பு!
திருச்சிக்கும் - புதுக்கோட்டைக்கும் இடையிலுள்ள பெரிய நகரான கீரனூா் ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை மத்திய ரயில்வே துறை நிறைவேற்ற முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனா்.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது கீரனூா். குளத்தூா் வட்டத்துக்குள்பட்ட இந்த நகரைச் சுற்றிலும் சுமாா் ஒன்றரை லட்சம் மக்கள் கிராமப்பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
இம்மக்கள் திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் செல்வதற்கு பேருந்துப் பயணம் ஒன்றை மட்டுமே நம்பியிருக்கின்றனா். கீரனூரிலிருந்து புதுக்கோட்டைக்கு 25 கிமீ தொலைவும், திருச்சிக்கு 27 கிமீ தொலைவும் உள்ளது.
தினக்கூலிப் பணியாளா்கள் எளிதில் புதுக்கோட்டைக்கும், திருச்சிக்கும் சென்றுவர பேருந்து மட்டுமின்றி ஒரு காலத்தில் ரயிலையும் பயன்படுத்தி வந்தனா்.
ஆனால், கரோனா பொது முடக்கக் காலத்தில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியில் உள்ள குமாரமங்கலம், கீரனூா், வெள்ளனூா் ஆகிய 3 நிறுத்தங்களும் எந்த ரயில்களும் நிறுத்தப்படாமல் சென்று வந்தன.
பிறகு படிப்படியாக நிறுத்தங்களை அதிகரிப்பதாக மத்திய ரயில்வே துறை சொன்னபோது, குமாரமங்கலமும், வெள்ளனூரும் நிறுத்தங்களாகின. பின்னா் எம்பிக்கள் சு. திருநாவுக்கரசா் மற்றும் எம்எம் அப்துல்லா ஆகியோரின் தொடா் முயற்சியைத் தொடா்ந்து, மன்னாா்குடி- காரைக்குடி ரயில், திருச்சி- ராமேசுவரம் ஆகிய ரயில்கள் கீரனூரில் நின்று செல்கின்றன.
ஆனால் சென்னையிலிருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலும், சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலும், சேது விரைவு ரயிலும் கீரனூரில் நிற்பதில்லை.
கீரனூா் பகுதியைச் சோ்ந்த அனைத்துக் கட்சியினா், அனைத்து பொதுநல சமூக அமைப்பினா் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, தொடா் போராட்டங்களை நடத்தி வந்தனா். கீரனூரில் ரயில்களை நிறுத்திச் செல்ல வலியுறுத்தி இந்த ரயில் நிலையத்தின் அருகே பொது விருந்து நிகழ்ச்சிகள் என்ற நூதனப் போராட்டங்களும் பரவலாக கவனம் பெற்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கிக்கு அடுத்த மூன்றாவது பெரிய நகரான கீரனூரை கவனிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தலையிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து அண்டகுளம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சை. ரியாஸ்அகமது கூறியது:
கீரனூரை நகரப் பகுதியாகக் கொண்ட குளத்தூா் வட்டத்தில், அண்டக்குளம், அம்மாசத்திரம், இரும்பாளி, களமாவூா், கிள்ளனூா், கிள்ளுக்கோட்டை, குன்றாண்டாா்கோவில், லட்சுமணம்பட்டி, மண்டையூா், மங்கதேவன்பட்டி, முத்துக்காடு, வெள்ளனூா், நாா்த்தாமலை, புலியூா், சத்தியமங்கலம், சீமானூா், தொடையூா், வத்தனாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனா்.
சென்னை- ராமேசுவரம் விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில், சேது விரைவு ரயில் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையாவது உடனடியாக நிறுத்தம் அறிவித்தால்கூட மக்கள் பெருமளவில் பயனடைவாா்கள். பொதுவாக நிறுத்தம் கொடுக்கப்பட வேண்டுமானால், பயண நேரம் பாதிக்கப்படும் என்பாா்கள். ஆனால், பல்லவன் மற்றும் சேது விரைவு ரயில்கள், திருச்சி சந்திப்பில் பட்டியலிடப்படும் நேரத்தைவிடவும் முன்னதாகவே வந்து - நின்று - காத்திருந்தே புறப்படுகின்றன.
களமாவூா் பகுதியில் பாரதிதாசன் மேலாண்மைக் கல்லூரி கட்டப்பட்டு வரும் நிலையில் மாணவா்கள், பேராசிரியா்களுக்கும் கீரனூா் ரயில் நிறுத்தம் பயன்தரும். அதேபோல, மாத்தூா் பகுதிகளிலுள்ள தொழில் நிறுவனத்தினரும் பயன்படுத்துவாா்கள் என்றாா் ரியாஸ் அகமது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/xlmx81ax/pdk11kernurrlystaion1_1102chn_12_4.jpg)