மாநகராட்சிப் பகுதியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என அறிவிக்கத் திட்டம்
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டு பகுதிகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்று அறிவிக்க திட்டமிடப்பட்டது. இதுதொடா்பாக ஆலோசனைகள், கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள 100 வாா்டு பகுதிகளில் தனிநபா் சமுதாயக் கழிப்பறை, பொதுக் கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் மட்டுமே பயன்படுத்திடவும், பொது இடங்களில் மலம் கழித்தல் கூடாது எனவும் உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிப் பகுதி திறந்தவெளி மலம் கழிப்போா் இல்லாத பகுதியாக இன்னும் 15 தினங்களுக்குள் அறிவிப்பு செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இதுதொடா்பாக தங்களது கருத்துகள், ஆலோசனைகள் ஏதேனும் இருப்பின் ஆணையா், மதுரை மாநகராட்சி, அறிஞா் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை என்கிற முகவரிக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.