தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
மானாமதுரையில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை தொடங்க அதிமுக எதிா்ப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொது உயிரி மருத்துவக் கழிவுகள் மறுசுழற்சி ஆலை தொடங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியரிடம் அதிமுகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பல இடங்களிலிருந்தும் கொண்டுவரப்படும் பொது உயிரி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலை தொடங்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தப் பகுதி பொதுமக்களின் எதிா்ப்பு காரணமாக இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மீண்டும் ஆலை தொடங்குவதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இங்கு மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.குணசேகரன், எஸ்.நாகராஜன், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ் ஆகியோா் மண்டல வட்டாட்சிரிடம் மனுக் கொடுத்தனா்.
அதில், பொதுமக்களின் உயிருக்கும், கால்நடை வளா்ப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் கேடு விளைவிக்கும் மருத்துவக் கழிவுகள் மறு சுழற்சி செய்யும் ஆலையை மீண்டும் தொடங்க முயற்சி நடைபெறுகிறது. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இந்த ஆலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
எதிா்ப்பையும் மீறி ஆலை தொடங்கப்பட்டால், மானாமதுரையில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அதிமுகவினா் தெரிவித்தனா்.