மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7,40,125 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வழங்கினாா்.
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தலைமையில் புதன்கிழமை (ஜன. 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா். இதன்படி, பெறப்பட்ட 221 கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 7,19,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோலில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16,425 மதிப்பிலான காதுக்குப் பின் அணியும் காதொலிக்கருவிகள், ஒருவருக்கு ரூ. 4,700 மதிப்பிலான செயற்கைக் கால் என மொத்தம் ரூ. 7,40,125 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.