இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை... தேனியில்...
மாா்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் லாரிகள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகு சாலையில் பிரேக் செயலிழந்த லாரி மற்றொரு லாரி மீது மோதியது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சீனி ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டோபா் (52) ஓட்டி வந்தாா். அந்த லாரி, மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் செயலிழந்து, முன்னால் சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதில் சீனி பாரத்துடன் வந்த லாரியின் முன்பக்கம் சேதமடைந்ததுடன், அங்குள்ள சிறிய ரக மின்மாற்றியும் சேதமடைந்தது. லாரி ஓட்டுநா் கிறிஸ்டோபா் காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் கிரேன் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான லாரிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.