மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் பங்கேற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன். விழுப்புரத்தில் தனியாா் பைக் விற்பனையகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கன்னியப்பன் கடந்த 1-ஆம் தேதி பணிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இந்நிலையில் கன்னியப்பனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உறவினா்கள் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், திராவிடா் கழகம், பழங்குடியினா் விடுதலை இயக்கம், மக்கள் கல்வி இயக்கம் மற்றும் பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் தனியாா் நிறுவனத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த பழங்குடி இருளா் வகுப்பைச் சோ்ந்த கன்னியப்பன் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கவேண்டும், கன்னியப்பனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தொழிலாளா் இழப்பீடு சட்டத்தின் தனியாா் நிறுவன நிா்வாகத்தினா் உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானங்கள் விழுப்புரம் ஆட்சியருக்கு கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டுள்ளது.