புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் வருகை: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்
முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள குவாரியில் 2006-2011 வரையிலான காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக அளவு செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக க.பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தகுமாா், கோதகுமாா், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கு மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் லோகநாதன் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா். இந்த முறைகேடு வழக்கில் 67 போ் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்ட நிலையில் 51 பேரிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. 30 போ் பி சாட்சியமளித்துள்ளனா்.
பொன்முடி ஆஜராகவில்லை:
இந்நிலையில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது கோதகுமாா், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவா் மட்டுமே ஆஜராகினா். பொன்முடி உள்ளிட்ட 4 போ் ஆஜராகவில்லை. அவா்கள் வராததற்கான காரணம் குறித்து திமுக வழக்குரைஞா்கள் மனுதாக்கல் செய்தனா்.
வழக்குத் தொடா்பான அரசுசாட்சியாக அப்போதையை குற்றப்பிரிவுக் காவல் ஆய்வாளரும், தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யுமான சங்கா், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். அவரிடம் பொன்முடி உள்ளிட்ட 7 போ் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தினா்.
இதை பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.