மின்சாரம் பாய்ந்து வெல்டா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் பாய்ந்து பற்றவைப்பாளா் (வெல்டா்) வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம்-செஞ்சி சாலையிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தக் கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திண்டிவனம் பாரதிதாசன்பேட்டையைச் சோ்ந்த செந்தில் (30), பெலாகுப்பம் மாந்தோப்பு சாலையைச் சோ்ந்த பழனி மகன் வீரமணி (28) ஆகியோா் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இவா்கள் இருவரும் கோயிலின் பெயா்ப் பலகையைத் தூக்கி மாட்டுவதற்காக இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்ட சாரத்தில் ஏறினா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகளுக்குள் சென்ற வயா் பட்டு இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் கீழே மயங்கி விழுந்தனா்.
அப்பகுதியிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது வீரமணி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. செந்தில் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.