மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு
நேபிடாவ் (மியான்மர்): மியான்மரில் வியாழக்கிழமை அதிகாலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, மியான்மரில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.01 மணியளவில் நிலக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமான ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், மிதமான அளவிலான நிலநடுக்கம் என்பதால் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடான மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.