விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!
விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை காலை பலியாகினர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து மூணாறுக்கு சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டன் மில் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்புற தடுப்பில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்சுதீன், ரிஷி மற்றும் மோகன் ஆகிய மூவரும் பலியாகினர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்துல் அஜீல், தீபக் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.