முகத்தில் கரும்புள்ளிகள் பிரச்னையா? சரிசெய்ய இயற்கையான வழி இதோ!
முகத்தில் கரும்புள்ளிகள் முக அழகைக் கெடுக்கும் வகையில் மோசமாக இருக்கும். இதனைச் சரிசெய்ய பலவகையான க்ரீம்கள் வந்துவிட்டன. ரசாயனம் நிறைந்த க்ரீம்களால் சிலருக்கு கரும்புள்ளிகள் பிரச்னை மேலும் அதிகரித்து விடுகிறது.
இந்நிலையில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் இ, பாலிஃபினால்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகளைப் பயன்படுத்தி கரும்புள்ளிகளை படிப்படியாக குறைக்கலாம்.
சியா விதைகள் உணவில் மட்டுமல்ல, அழகுக்கும் பயன்படுகிறது. சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துகள் நமது சரும செல்களை சரிசெய்ய உதவுகின்றன.
கரும்புள்ளிகள் அல்லது ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது அதிக சூரிய ஒளி, முகப்பரு வடுக்கள், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
2 டீஸ்பூன் சியா விதைகளை அரை கப் தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அத்துடன் சிறிதளவு தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி குறிப்பாக கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவியபிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னதாக சில துளிகள் சியா எண்ணெய் விதையை சருமத்தில் மசாஜ் செய்யலாம்.
வெள்ளரிச் சாறுடன் ஊறவைத்த சியா விதைகளை கலந்து தேய்க்கலாம். அல்லது இந்த கலவையை ஐஸ் க்யூபில் ப்ரீசரில் வைத்து பின்னர் அதனை முகத்தில் தடவலாம்.
ஊறவைத்த சியா விதைகளுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கொஞ்சம் ரோஸ் வாட்டர் சேர்த்து கலவையை முகத்தில் தேய்க்கலாம். 15 -20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை இதனைச் செய்யலாம்.
மேலும், கரும்புள்ளிகள் ஏற்படுவதைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க இது உதவும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அவசியம். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுங்கள். சரும அழகுக்கு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அவசியம்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Are dark spots on your face? Here's a natural way to fix them
இதையும் படிக்க | ஆபத்தை ஏற்படுத்தும் க்ரீம்கள்! சருமப் பராமரிப்புக்கு இந்த 3 மட்டுமே போதும்!