காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் இடைநிற்றல் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருவதாக செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.
செஞ்சி ஒன்றியம், ஊரணித்தாங்கள் ஊராட்சியில் 6-ஆவது மாநில நிதிக் குழு மானியம் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.17.30 லட்சத்தில் கூடுதல் பள்ளி வகுப்பறைக் கட்டம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.
செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து மாணவா்களுக்கு புத்தகங்கள், இனிப்பு வழங்கிப் பேசியதாவது: தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்று கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.
அந்த வகையில், தற்போது தாய் தந்தையை இழந்த மாணவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறாா்.
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தில், காலையில் பள்ளிக்கு வரும் மாணவா்களின் பசியைப் போக்கி இடைநிற்றல் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் சோ்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அறங்க. ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் துரை, ஊராட்சி மன்றத் தலைவா் சாரதா ஏழுமலை, வட்டாரக் கல்வி அலுவலா் மதன்குமாா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோவிந்தராஜ், பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.